search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர சுற்றுலா துறை"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆந்திர சுற்றுலாத் துறை புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். இந்த காத்திருப்பு நேரத்தை குறைக்க ஆந்திர அரசும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மூலம் புதிய திட்டத்தை அமல்படுத்த ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக ஏ.சி., டி.வி., வைபை வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசு பஸ்களை ஆந்திர சுற்றுலா துறை இந்த மாத இறுதியில் இருந்து இயக்க உள்ளது. சோதனை அடிப்படையில் இந்த திட்டம் முதல் கட்டமாக விசாகப்பட்டினத்தில் இருந்து தொடங்குகிறது.

    இந்த சொகுசு பஸ்சில் 43 பேர் பயணம் செய்யலாம். இந்த பஸ் தினமும் விசாகப்பட்டினத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திருப்பதி வந்தடையும்.

    பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மாற்று பஸ்சில் பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். அவர்களுக்கு சிறிது நேரம் தங்கும் இடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் வசதி, குளியல் வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.

    பின்னர் அவர்கள் தரிசனத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களுக்காக முன் கூட்டியே தரிசன டிக்கெட்டுகளை சுற்றுலா துறை ஏற்பாடு செய்து தயாராக வைத்திருக்கும். அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். அவர்களுக்கு தேவையான லட்டு பிரசாதங்களும் வழங்கப்படும்.

    பின்னர் அவர்கள் திருமலையில் இருந்து திருப்பதி அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து சொகுசு பஸ் மூலம் காளகஸ்தி கோவிலுக்கு செல்வார்கள். அங்கு தரிசனம் செய்த பின்பு விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்வார்கள்.

    இது 3 நாள் சுற்றுலா ஆகும். இதற்கான கட்டணம் ரூ.4 ஆயிரம். இந்த திட்டம் வெற்றி பெற்றால் படிப்படியாக விஜயவாடா, குண்டூர், பிரகாசம், கோதாவரி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர சுற்றுலாத் துறை இந்த திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×